அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதில் தமது நோக்கம், எமது அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என்றும் தற்போது எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைக் காரணமாக தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

(செய்திப் பின்னணி)

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக கருத்து வெளியிட்டு பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்த எம்சிசி பெர்டினன்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

பெர்டினான்டோவின் ராஜினாமா தகவலை இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பெர்டினன்டோவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவருக்குப் பதிலாக இலங்கையின் மத்திய மின்சார வாரியத்தின் (CEB) தலைவராக துணைத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கஞ்சனா விஜசேகர கூறியுள்ளார்.

அமைச்சர் எந்த காரணத்தையும் மேற்கோள் காட்டவில்லை என்றாலும், ´தி மார்னிங்´ பெர்டினன்டோவின் ராஜினாமா கடிதத்தின் நகலை வெளியிட்டுள்ளது. அதில், “தனிப்பட்ட காரணத்தால்” பதவி விலகியிருப்பதாக பெர்டினன்டோ கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபெர்டினன்டோவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவருக்குப் பதிலாக இலங்கையின் மத்திய மின்சார வாரியத்தின் (CEB) தலைவராக துணைத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் எழுதினார்.

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, சமீபத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எவ்வாறு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

´´இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு திட்டம் வழங்கப்பட்டது எவ்வாறு?. இந்தியா அரசாங்கத்தினால் இது தொடர்பிலான அறிக்கை இருக்கின்றதா? எமது பிரதிநிதி இவர் என இந்தியா கோரிக்கை இருக்கின்றதா?” என பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.

அதற்கு இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ.பெர்டினான்டோ பதிலளித்தார்.

´´ஜனாதிபதியினால் இது தொடர்பிலான அறிவிப்பு அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்திருந்தார். கடந்த நவம்பர் 24 ஆம் திகதி என நினைக்கின்றேன். இதை அதானி நிறுவனத்திற்கு வழங்குங்கள் என கூறினார். இதை வழங்குமாறு இந்திய பிரதமர் மோதி எனக்கு அழுத்தங்களை விடுக்கின்றார் என அவர் என்னிடம் கூறினார். இது எனக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உள்ள பிரச்சினை இல்லை. இது முதலீட்டு சபைக்குரிய பிரச்சினை என நான் கூறினேன். ஜனாதிபதி எனக்கு உத்தரவு பிறப்பிக்கின்றார், அதனால், நிதி அமைச்சு இதனை செய்துக்கொள்ளுமாறு நான் கடிதமொன்றை எழுதினேன்” என எம்.எம்.சீ. பெர்டினான்டோ தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் பதிவு ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.

மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக, உணவு உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாக பெர்டினான்டோ கூறியுள்ளார்.

இந்த கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

1989 மின்சாரச் சட்டத்தில் போட்டி ஏலத்தை நீக்கிய திருத்தத்தை பாராளுமன்றம் நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பொது விசாரணை நடைபெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான எஸ்ஜேபி, “கோரப்படாத” அதானி ஒப்பந்தத்திற்கு இடமளிப்பதே திருத்தத்தை முன்வைப்பதற்கான முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டியது. எஸ்ஜேபி கட்சி, 10 மெகாவாட் திறனுக்கு அப்பாற்பட்ட திட்டங்கள் போட்டி ஏலம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று கோரியது. 225 உறுப்பினர்கள் இடம்பெற்ற இலங்கை பாராளுமன்றத்தில், இலங்கை மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் மசோதாவுக்கு ஆதரவாக 120 பேரும் எதிராக 36 பேரும் வாக்களித்தனர். 13 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.

இந்த சட்டத்திருத்த நடவடிக்கைக்கு, இலங்கை மின்சார சபையின் (சிஇபி) மின்சாரத் துறை தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த திருத்தங்கள், சட்டமாக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மின்வாரியத்தில் உள்ள பொறியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.வாரத்தின் தொடக்கத்தில், சிஇபி இன்ஜினியர்ஸ் யூனியன், அதானி குழுமம் முதலில் சிஇபி க்கு ஒரு யூனிட் 6.50 அமெரிக்க சென்ட்டுக்கு மின்சாரத்தை விற்க முன்வந்ததாகக் கூறியது. “இப்போது ஒரு யூனிட் 7.55 சென்ட்களுக்கு திட்டத்தை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று சிஇபி பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் ஜூன் 6 அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்திய பெருநிறுவன தொழிலதிபரான கௌதம் அதானி 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான தனது சந்திப்பைப் பற்றிய தமது ட்வீட்டில், துறைமுகத் திட்டம் மட்டுமின்றி, “மற்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் கூட்டு சேர்வது” பற்றி கவனித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

(பிபிசி தமிழ்)

Related posts