யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியம் என போற்றப்பட்ட யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன .
1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்தில் மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் குழுவொன்றினால் நூலகம் தீயூட்டப்பட்டது.
நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.
இந்நூலகத்தை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் தமிழ்நாடு உட்பட பல பாகங்களிலிருந்தும் தேடிச் சென்று பயன்படுத்தியிருந்தனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழைமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts