மகிந்த ராஜபக்ச கடவுச்சீட்டு ஒப்படைக்கவில்லை

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் மகிந்த ராஜபக்சவும் பொலிஸ் உயர் அதிகாரி தேசபந்து தென்னக்கோனும் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் இடம்பெற்றவேளை மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் அயேசா ஜினசேன இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச உட்பட பலர் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் ஒப்படைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனது வீடு தாக்கப்பட்டவேளை தனது கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுவிட்டது என ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

——

மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யோசித ராஜபக்ச நிதீசஜயசேகர இருவரும் இரவு வர்த்தகரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமானநிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கறுப்பு உடையணிந்திருந்தனர் அவர்களை பலர் விமானநிலையத்திற்கு வெளியே சந்தித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசித ராஜபக்ச மே 9 ம் திகதி திங்கட்கிழமை காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றார் அதன் பின்னர் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது.
—–

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் தொடர்பான ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மருந்துகள் நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் குறித்து கலந்துரையாடும் வகையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கலந்துரையாடலின் பின்னர் இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரான்ஸ் அரசாங்கத்தினால் நாளை வழங்கப்படவுள்ள மருந்துகளின் கையிருப்பு அமைய நாட்டிலுள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களிலும் தொடர்ந்து 90 நாட்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மருந்துகளை விரைவாக கொள்முதல் செய்து வருகிறது.

மேலும், தற்போது 76 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts