பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசேட அழைப்பு

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 5 நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு கோரியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

——

மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ தீர்வு இல்லை என்பதையே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய உரை காட்டுவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொடுங்கோல் அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

இதன்படி நேற்று (12) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் மக்களின் இதயத்துடிப்போடு ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக பாராளுமன்றத்தில் சாத்தியமான அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் அடைவதற்காக நாங்கள் பாடுபடுவோம் எனவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, 20 ஆவது திருத்தம் தலைகீழாக மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts