பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை நேற்றையதினம் (28) சந்தித்திருந்தார்.

மார்ச் 25ஆம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றிருந்த சந்திப்பு உள்ளிட்ட அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேராளர்களால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரங்கள், காணாமல்போனோர் விவகாரங்கள், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் புலம்பெயர் மக்களின் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்தித்திருந்தவேளையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்று மாலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடன் இடம்பெற்றிருந்த சந்திப்பின்போதும் இவ்விவகாரம் தொடர்பாக தெளிவான புரிதலை வெளியுறவுத் துறை அமைச்சர் பெற்றுக்கொண்டிருந்தார்.

அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலின் மீது தொடர்புடைய விவகாரங்களில் ஏற்பட்டிருக்கும் அனைத்து சாதகமான அபிவிருத்திகளையும் இந்த சகல சந்திப்புக்களின் போதும் வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேற்றிருந்தார். ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்காக இலங்கை தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கிவருவதாக அவர் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்திய அபிவிருத்தி பங்குடைமையின் பங்களிப்பு தொடர்பாகவும் இந்த சகல சந்திப்புகளின் போதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பிரதமருடன் இணைந்து யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தினை மெய்நிகர் மார்க்கமாக திறந்து வைத்தமை குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் திருப்தியினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா உடனும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்தியேகமான சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்கள் கலந்துரையாடியதுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.

Related posts