புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைகள் பேட்டி

புற்றுநோய் என்பது மனிதர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு நோய் என்றாலும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையில் அது பாதிக்கிறது. அப்படியெனில் சிகிச்சைகளும் நோயாளிக்கு நோயாளி மாறுபடும் தானே. ஒவ்வொரு நோயாளிக்கும் அவரின் உடல்வாகு, நோயின் பாதிப்பு அவர்களின் எதிர்ப்பு சக்தி, வயது, உடலில் இருக்கும் மற்ற நோய்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அவரவர்க்கு ஏற்ற தனி சிறப்பு சிகிச்சை முறைகளை பின்பற்றினால் புற்றுநோய்க்கு சரியான சிகிச்சை அளிக்க முடியும்.

புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள் இன்று பல மாற்றங்களை சந்தித்து, மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சிகளை கண்டு, மிகவும் நேர்த்தியான துல்லியமான சிறப்பான சிகிச்சைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. பொதுவாக புற்றுநோய்க்கு மூன்று விதமான சிகிச்சை முறைகளை அளிக்க வேண்டி உள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இந்த மூன்று சிகிச்சையையும் அளிக்கக்கூடிய வசதிகளும் தொழில்நுட்ப கருவிகளும் மருத்துவ வல்லுநர் குழுவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அப்பொழுதுதான் ஒரு நோயாளிக்கான தனிப்பட்ட சிகிச்சை முறையை வடிவமைத்து திட்டமிட்டு சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை அளித்து அவரை குணமாக்கலாம் என்று காவேரி நியூஏஜ் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை துறையின் இயக்குநர், டாக்டர் A.N.வைதீஸ்வரன் அவர்கள் கூறினார். புற்று நோய்க்கான நவீன சிகிச்சைகள் பற்றியும் தொழில்நுட்பங்களை பற்றியும் பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுவாரஸ்யமான உதாரணங்களுடன் அவர் மேலும் கூறியது பின்வருமாறு,பொதுவாக புற்றுநோய்க்கு மூன்றுவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. ஒன்று அறுவை சிகிச்சை அடுத்து கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியோதெரபி) மூன்றாவது கீமோதெரபி என்ற மருந்து சிகிச்சை. இந்த சிகிச்சைகள் அனைத்துமே கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வந்துள்ளது.

அறுவை சிகிச்சை: முன்பெல்லாம் புற்றுநோய் கட்டியை அகற்ற, தேவைபடும் அளவிற்கு குறிப்பிட்ட பகுதியை அறுத்து கட்டியை அகற்ற வேண்டி இருந்து வந்தது. அதன் பின்பு கீ ஹோல் சர்ஜரி என்ற லேப்ரோஸ்கோப்பி முறையில் சிறு துவாரம் மூலம் லேப்ரோஸ்கோபி கருவியை செலுத்தி வெளியில் இருந்தபடி கட்டியை சுலபமாக அகற்ற முடிகிறது.

இதன் மூலம் நோயாளிக்கு அறுவை செய்த இடம் ஆறுவதற்கான நேரம் குறையும் என்பதுடன் மருத்துவமனையில் தங்க வேண்டிய காலமும் குறைந்து விடுகிறது. நோயாளி விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப இது உதவியாக இருகிறது. தற்பொழுது இந்த அறுவை சிகிச்சை முறையில் மேலும் ஒரு நுண்மையான முறையாக ரோபோடிக் சர்ஜரி வந்துவிட்டது. பொதுவாக ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது அவருடைய இரண்டு கைகளுக்கு உதவியாக அங்கே உதவி மருத்துவர்கள் செவிலியர்கள் என்று பல பேருடைய கைகளும் சேர்ந்து இயங்க வேண்டி இருக்கும். ஒருவருடைய வேகத்துக்கு மற்றொருவர் துல்லியமாக ஈடு கொடுக்க வேண்டி இருக்கும்.

சிறு மாறுபாடு ஏற்பட்டாலும் அறுவை சிகிச்சையில் சின்னச்சின்ன தவறுகள் நேரிடலாம். ஆனால் தற்போதைய ரோபோடிக் அறுவை சிகிச்சையில் கைகள் போன்ற பல கருவிகளை மருத்துவர் ஒருவரே இயக்கி அறுவை சிகிச்சையை அவர் விரும்பிய வண்ணம் அவருடைய வேகத்திற்கும் கணிப்பிற்கும் ஏற்ப சுலபமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து விட முடிகிறது. புற்றுநோய் கட்டியை முழுவதுமாக அகற்றுவதற்கு ரோபோடிக் சர்ஜரியும் லேப்ரோஸ்கோபி சர்ஜரியும் தற்போதைய காலங்களில் செய்கிறோம். இதனால் நோயாளி குணம் அடையக்கூடிய காலமும் மருத்துவமனையில் இருக்கக்கூடிய காலமும் மிகவும் குறைகிறது

ரேடியேஷன் தெரபி: ரேடியேஷன் தெரபி என்கிற கதிர்வீச்சு சிகிச்சை என்பது ஒரு நோயாளியின் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் உண்டாக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத செல்களை தாக்கி அழிப்பதற்காக உள்ளது. முன்பெல்லாம் இந்த கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட இடத்தில் ஒரு சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்திற்கு கதிர்வீச்சை அனுப்புவார்கள். அப்படி அனுப்பும் போது கட்டி இருக்கும் இடத்தை தாண்டி பக்கத்தில் உள்ள செல்களோ அல்லது உறுப்புகளோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தது.

அப்படி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதாலேயே மிகவும் குறைவான அளவிலான கதிர்வீச்சை தொடர்ந்து பல நாட்களுக்கு, அதாவது 5 நாட்கள் முதல் 35 நாட்கள் வரையில் கூட கட்டிகளின் அளவிற்கு ஏற்ப கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. அத்தனை நாட்களுக்கு நோயாளி மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டியும் இருந்தது. ஆனால் கடந்த 2௦ ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறையில் பலவித புதிய மாற்றங்களை மருத்துவத்துறை சந்தித்துள்ளது.சிகிச்சை அளிக்க வேண்டிய இடம் வட்ட வடிவமாகவோ சதுரமாகவோ செவ்வகமாக இருப்பதில்லை. அது வேண்டிய வடிவத்தை எடுக்கும் திறன் கொண்டதாக இருப்பதால் அந்த இடத்தின் அளவையும் வடிவத்தையும் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் மட்டும் கதிர்வீச்சை பாய்ச்சும் புதிய தொழில்நுட்பங்கள் வகுக்கப்பட்டது. இதனால் பக்கத்திலுள்ள ஆரோக்கியமான செல்கள் மற்றும் உறுப்புகள் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட இடத்தை துல்லியமாக தேர்ந்தெடுத்து கதிர்வீச்சை அனுப்ப முடிகிறது என்பதால் அங்குள்ள புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிப்பதற்கு தேவையான அதிக அளவு கதிர்வீச்சை நம்மால் ஒரே நேரத்தில் கொடுக்க முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தால் 30 நாட்கள் 35 நாட்கள் கொடுக்கப்பட வேண்டிய கதிர்வீச்சை நாம் ஐந்தே நாட்களில் கொடுத்து விடலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

அந்த காலத்தில் அளிக்கப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை ஒரு செல்லை முழுமையாக அழிக்கவும் செய்யும் அந்த செல்லை காயப்படுத்தி அது அழியாமலும் இருக்கச் செய்யலாம் ஆனால் தற்போதைய சிகிச்சையில் அந்த கதிர்வீச்சு புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழித்து விடுகிறது என்பது வரவேற்க வேண்டிய நல்ல முன்னேற்றம்.

கதிர்வீச்சு சிகிச்சையில் முன்பெல்லாம் புற்றுநோய் கட்டியின் அளவை மட்டும் பார்க்காமல், இவ்வளவு கதிர்வீச்சை அனுப்பினால் இவ்வளவு செல்கள் அழிக்கப்படும் என்று திட்டமிட்டு சிகிச்சை அளித்து வந்தோம். இந்த முறையை ஃபார்வேர்ட் பிளானிங் என்று அழைப்போம். ஆனால் தற்போதைய காலங்களில், இந்த வடிவத்தில் இருக்கும் கட்டியை சரியாக திட்டமிட்டு தாக்க எவ்வளவு கதிர்வீச்சு அளிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அதே அளவிலான கதிர்வீச்சை துல்லியமாக அந்த இடத்திற்கு அனுப்பி அந்த புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிக்கக்கூடிய முறையை பின்பற்றுகிறோம். கடந்த 20 ஆண்டுகளில் கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இந்த நவீன முன்னேற்றத்திற்கான காரணம் கணினி தொழில்நுட்ப வளர்ச்சி என்பதே மறுக்க முடியாத உண்மை. கதிர்வீச்சு சிகிச்சையில் மற்றும் ஒரு நவீன சிகிச்சை உள்ளது. அதாவது கட்டி, மேலும் கீழும் அசையக்கூடிய உறுப்பில் இருக்குமானால், அதாவது நுரையீரல் போன்ற உறுப்பில் இருக்குமானால், சரியான நேரத்தில் கதிர்வீச்சை நாம் புற்றுநோய் கட்டியை நோக்கி அனுப்ப வேண்டும். முதலில் நோயாளியின் மூச்சுக்கு ஏற்ப உடல் அசைவை ஒரு சென்சார் கேமரா மூலம் படம் பிடித்து அதை கதிர்வீச்சு கருவியின் கண்ட்ரோல் பேனலுக்கு அனுப்பி விடுவோம். மூச்சை விடும் பொழுது அந்த கட்டியை நோக்கி கதிர்வீச்சை அனுப்பும் இந்த கருவி, மூச்சை இழுக்கும் பொழுது நிறுத்திவிடும்.

அதேபோல் மறுபடியும் மூச்சு விடும் பொழுது கதிர்வீச்சை அனுப்புவதும் இழுக்கும் போது நிறுத்தி விடுவது என்று நோயாளியின் மூச்சுக்கு ஏற்ப கொடுக்கக் கூடிய சிறப்பு இந்த சிகிச்சை முறையில் உள்ளது. லீனியர் ஆக்சிலேட்டர் மூலம் மிகவும் சிறப்பான முறையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையை பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அளிக்க முடியும் என்பதே நற்செய்தி. இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி ( IGRT ), அடேப்டிவ் ரேடியேஷன் தெரபி ( ART ), வால்யுமெட்ரிக் மாட்யுலேட்டட் ஆர்க் தெரபி ( VMAT ), ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி ( SRT ), ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோதெரபி ( SBRT ) போன்ற நுணுக்கமான தொழில்நுட்பங்கள் மூலம் உடலின் எந்த பகுதியிலும் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க முடியும்.கீமோதெரபி: புற்றுநோய் செல்கள், புற்றுநோய் கட்டி இருந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டத்தில் பரவி மற்ற இடங்களுக்கு பரவி இருக்கும் பட்சத்தில் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த செல்கள் சென்று தங்கி இருக்கலாம். மற்ற இடத்தில பரவிய செல்களை அழிக்காமல் நாம் முழுமையான ஒரு சிகிச்சையை புற்றுநோய்க்கு கொடுக்க முடியாது. எனவே கீமோதெரபி என்பதும் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு இன்றியமையாத பகுதியாக இருக்கிறது. கீமோதெரபி என்பது மருந்தை ரத்தக் குழாய் மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் ஒரு சிகிச்சை முறையாகும்.

இந்த முறையில் அனுப்பப்படும் மருந்து புற்றுநோய் செல்களை உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதை கண்டுபிடித்து தாக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இம்மாதிரி மருந்தை அனுப்பும் பொழுது அந்த மருந்து மற்ற ஆரோக்கியமான செல்களையும் உடலின் முக்கிய உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
ஆனால் தற்போதைய நவீன கீமோதெரபி முறையில் டார்கெட்டட் செல் தெரபி என்ற முறை வந்துள்ளது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை மட்டுமே சென்று தாக்கக்கூடிய இந்த மருந்துகள், உடலின் மற்ற ஆரோக்கியமான செல்களையும் மற்ற முக்கிய உறுப்புகளையும் தாக்குவதில்லை.
இம்யுனோதெரபி: புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று, உடல் வயதானாலும் வேறு சில காரணங்களாலும் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது. புற்றுநோய் செல்கள் உடலில் அபரிமிதமான முறையில் வளர்ந்து கொண்டே செல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது அபரிமிதமான வேகத்தில் வளரக்கூடிய செல்களை நம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால் இம்யுனோதெரபி என்ற முறையில் சில மருந்துகள் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் இந்த புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்க கூடியதாக அமைகிறது. இது நவீன காலங்களில் வந்துள்ள மிகவும் சுலபமான முறையில் புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய ஒரு சிகிச்சை முறையாகும்.

இப்படி ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாக பரிசோதித்து அவருக்கு ஏற்ற சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்து மருத்துவர்கள் ஒரு குழுவாக அந்த நோயாளிக்கு சரியான திட்டமிட்ட துல்லியமான சிகிச்சை அளிக்கும் பொழுது அந்த நோயாளி புற்று நோயிலிருந்து முழுமையாக குணமாகிறார். குறைவான பக்கவிளைவுகளுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க உதவுவதாகவும் இன்றைய நவீன சிகிச்சை முறைகள் இருக்கின்றன” என்று கூறி முடித்தார் மருத்துவர் வைதீஸ்வரன் அவர்கள்.

Related posts