எந்த சமரசமும் செய்யப்போவதில்லை- புதின் பிடிவாதம்

உக்ரைன் விவகாரம்: ரஷிய நாட்டின் நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது

இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.

அதை தொடர்ந்து, அங்கு ரஷிய படைகள் நுழைவதற்கும் புதின் உத்தரவிட்டார். இதனால் அங்கு போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அதிபர் புதினுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமானது. உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் களமிறங்கியதால், ரஷியா நேரடியாக போர் தொடுக்காமல் இந்த குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தது.

தனி நாடாக அறிவிக்கப்பட்ட டிஎன்ஆர், எல்என்ஆர் எனப்படும் பிராந்தியங்களில் எந்த பொருளாதார, வர்த்தக உறவுகளில் அமெரிக்காவை சேர்ந்த எந்த ஒருவரும் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். உக்ரைனின் இறையாண்மையில் தலையிடும் ரஷியாவின் முடிவு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் எந்த ஒரு நாடும் ஆதரிக்கவில்லை.

ரஷியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து உலக நாடுகளுடன் பேசி வருவதாக ஜப்பான் கூறி உள்ளது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் படை லட்சக்கணக்கில் உக்ரைனை சுற்றி குவிக்கப்பட்டுள்ளதாக ரஷியாவும் பதில் குற்றச்சாட்டை சுமத்தியது. இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலமாகவும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தும் தனது நாட்டில் செயல்படும் 5 ரஷிய வங்கிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷிய வங்கிகளின் சொத்துக்களையும் இங்கிலாந்து அரசு முடக்கி உள்ளது.

ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகள், சாதாரண அமெரிக்க மக்களையும் பாதிக்கும் என, அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் எச்சரித்துள்ளார்.

ரஷியா செயலாளருடன் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கென் ரத்து செய்துள்ளார். உகரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடங்கிவிட்டது என அமெரிக்கா கருதுவதால், இந்த சந்திப்பு எவ்வித பலனையும் தராது என, ஆண்டனி பிளிங்கென் கூறி உள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பு, அடுத்த 24 மணிநேரத்தில் நிகழும் என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நுழைந்த தகவலைத் தொடர்ந்து, உலக அளவில் பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது.

ரஷியாவில் வசிக்கும் உக்ரைன் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – உக்ரைன் அரசு உத்தரவிட்டு உள்ளது.

ரஷிய நாட்டின் நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Related posts