உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 22. 06

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 06

வாழ்வு முடியுமுன் !

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ (அறியப்பட்டேனோ) அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த்

தொடர்கிறேன். பிலிப்பியர் 3:12

தாமரைப் மலர்கள் நிறைந்திருந்த ஒரு குளத்தின் மேற்ப்பரப்பு தாமரைக் கொடியினால் முழுதாக மூடப்பட்டிருந்தது. பார்வைக்கு மிக அழகாக இருந்தது. கொடிகளை விலக்கிப் பார்த்தால் உள்ளே சேறும் சகதியுமாய் இருந்தது. இதுதான் நம் அநேகருடைய வாழ்வும், சந்தோசமாக இருக்கிறோம், நன்றாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்கிற அநேகருடைய வாழ்வு குழம்பிய நிலையில் இருக்கிறது என்ற உண்மையை அவர்களே அறிவார்களோ என்பது ஐயம்தான். இன்று, நமது நிலைமை என்ன என்பதை உண்மைத்துவத்துடன் ஒப்புக்கொள்வோமாக. அப்போது, நாம் எப்படி இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றறாரோ, அந்த வழியில் நாம் செல்ல அவர் நம்மை விடுவிக்கிறார்.

” என் இருதயத்திற்கு ஏற்றவன் ” (அப்.13:22) என்று தாவீதைக் குறித்துச் சாட்சி சொன்ன தேவன், தாவீது செய்த தவறுகளையும் எழுதிவைத்திருக்கிறார். தாவீது தனது ராஜஅதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொருவரின் மனைவிமீது ஆசைவைத்து அவளது கணவனைக் கொன்று …இந்தப் பகுதி பரிசுத்த வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளது, நமது பாவங்களுக்குச் சாட்டுக்கூறுவதற்காகவல்ல. நாம் எல்லோரும் தேவனுடைய பரிசுத்தமாகுதலின் படிமுறையில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான்.

நூம் யாராய் இருக்கவேண்டும் என்பது தெரிந்திருந்தாலும், நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் உண்மையாக இருக்கிறோமா? பவுல் அப்போஸ்தலன், சிறையில் இருந்து கொண்டு, தனக்கு எதுவும் எந்நேரமும் நேரிடலாம் என்ற நிலையிலும் தனது நித்திய தரிசனத்தை இழந்து விடவில்லை. கிறிஸ்துவை அறிகிற அறிவும், கிறிஸ்துவைப்போல வாழுவதும், கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற யாவையும் தனக்குள் கொண்டிருக்கிறதான தனது வாழ்வின் இலக்கை இன்னமும் அடையமுடிய வில்லை என்று மனந்திறந்து எழுதியுள்ளார். அவர் தன்னைத்தானே நன்கு புரிந்து கொண்டிருந்தார்.

கொஞ்சக்காலத்தில் முடிந்துவிடும் இந்த உலகவாழ்வில் ஏன் போலித்தனம்? எமது வாழ்வில் ஏதோ உச்சியை எட்டிவிட்டதுபோன்று வாழ்வது ஏன்? மூச்சு நின்றால் தருணம் ஏது? நூம் எங்கிருக்கிறோம் என்று உண்மையாய் அறிக்கையிட்டால், தேவன் நமது வாழ்வை மாற்றியமைக்க ஆவலாய் இருக்கிறார். ஆனால், அது அவர் நம்மீது கொண்டிருக்கும் நோக்கத்தின்படியேயல்லாமல், நாம் விரும்புகிறபடியல்ல. ஆகவே நாளையதினம் நமக்கு கிடைக்காமற்போனாலும், இன்றே நம்மை இருக்கிற விதமாக கர்த்தரின் கரத்தில் ஒப்புவிப்போமாக.

இரக்கம் நிறைந்த நல்ல பிதாவே, எனது உண்மை நிலையை உமது பிரசன்னத்தில் ஒப்புக்கொள்கிறேன். நீர் என்னில் கொண்டிருக்கும் உமது சித்தத்தின்படி என்னை வனைந்தருளும். எனது மேன்மைகளை நான் அகற்றி, நீர் என்னில் மகிமைப்பட, மேன்மைப்பட எனக்கு கிருபை தந்து வழிநடத்தும் பிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

Related posts