மோடி அரசு செய்தது தேசத்துரோகம் – ராகுல்காந்தி

பெகாசஸ் செயலியை வாங்கி மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது” என்று ராகுல்காந்தி டுவீட் செய்துள்ளார்.

உலக அளவில் 50,000 கைபேசிகளில் பெகாசஸ் ஸ்பைவேர் ஊடுறுவியுள்ளதாக, அம்னெஸ்டி இன்ட்டெர்னேசனல் அமைப்பும், பார்பிடன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 14 உலக நாடுகளின் தலைவர்களின் கைபேசி எண்களும் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அதிபர்கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் இந்த பட்டியலில் உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரின் கைபேசிகள், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் இந்த தலைவர்கள் யாரும், தம் கைபேசிகளை சோதனை செய்து, பெகாஸ் ஸ்பைவேர் அவற்றில் ஊடுறுவியுள்ளதாக உறுதி செய்யவில்லை. பெகாஸ் ஸ்பைவேர் மென்பொருளை, உலக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், தனி நபர்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் இதை உருவாக்கியுள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமானது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் பெகாசஸ் விவகாரத்தால் முடங்கியது. கடந்தாண்டு இந்த விவகாரம் பெரிதளவில் சர்ச்சையானபோது, இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மத்திய அரசு நிராகரித்தது. அக்டோபரில் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் இதழால் பெகாசஸ் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர் என்ற தலைப்பில் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “2017-இல் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் (அப்போதைய பிரதமர்) பென்ஜமின் நெதன்யாகுவும் கடற்கரையில் வெறும் கால்களில் நடந்தனர். இந்த உணர்வுகளுக்குக் காரணம் இருக்கிறது.

அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இதன்பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். நரேந்திர மோடி அரசு நமது ஜனநாயகத்தின் முதன்மையான நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸை ‘வாங்கியது’ என்று குற்றம் சாட்டினார்.’

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

நமது முதன்மை ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மீது உளவு பார்க்கவே மோடி அரசு பெகாசஸ் செயலியை வாங்கியுள்ளது. அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப்படை, நீதித்துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்புகளால் குறிவைக்கப்பட்டனர். இது தேசத்துரோகம். மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

Related posts