இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்.
சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் யாஷ் இணைந்துள்ளார்.
அவர் தொடர்பான காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இதில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரான கய் நோரிஸ் இணைந்துள்ளார்.
இவர், மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட், தி சூசைட் ஸ்குவாட், கோஸ்ட் இன் த ஷெல், த லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்பட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியவர்.
யாஷ் தொடர்பான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.