முகமூடி அணிந்த ஒருவன் சென்னையில் தொடர் கொலைகளைச் செய்கிறான். கொல்லப்பட்டவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்ற நோக்கத்துடன் உடல்களை எரித்துவிடுகிறான். இந்த வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் அரவிந்தன் (நவீன் சந்திரா), ஒரு சிறிய ஆதாரத்தைக் கொண்டு, கொலை செய்யப்படுபவர்கள் யார்? அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரால் அந்த கொலையாளியை நெருங்க முடிந்ததா என்பது கதை.
புலன் விசாரணைப் படங்களில், கொலையாளி வரித்துக் கொண்டிருக்கும் உளவியல் காரணம், கொலை செய்யப்படுகிறவர்களுக்கு அவனுடன் இருக்கும் தொடர்பு ஆகியன நம்பகமாகவும் ஆழமாகவும் இருந்தால் தவிர, அதில் பார்வையாளர்களின் மனம் ஈடுபாடு காட்டாது. இந்த அடிப்படையான தர்க்கத்தில் நேர்மையான ஈடுபாட்டைக் காட்டியிருப்பதுடன், ‘இரட்டையர்’களைக் கொண்டு பிளாஷ் பேக் கதையை வடிவமைத்த விதமும் அதைப் படமாக்கிய விதமும் அபாரம் என்று சொல்ல வைக்கிறது.
பொதுவாக இதுபோன்ற கதைகளில், கொலை காட்சிகளை ரத்தக் களரியாகக் காட்டி முகம் சுளிக்க வைப்பதுதான் இன்றையப் போக்கு. அதை அடியோடு தவிர்த்து, கொலையாகி வருபவர்கள் யார் என்பதைக் கண்டறியத் துடிக்கும் காவல் அதிகாரி அரவிந்தனின் தேடல் ஆர்வத்தையும் அவரது தனிப்பட்ட குணப்பாங்கையும் கவனிக்க வைத்து, இவர் உறுதியாகக் கொலையாளியைக் கண்டடைவார் என்கிற நம்பிக்கையை, காட்சிகளின் வழி உருவாக்கி, பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்.
அதேபோல், பள்ளி நிர்வாகி அபிராமியை, அரவிந்தன் சந்தித்த கையோடு கொலையாளி யார் என்கிற ரகசியம் உடைந்துவிடுகிறது. ஆனால் அதன்பின்னும் அவனை நெருங்கிக் கண்டடைவதில் திரைக்கதையில் இயக்குநர் பொதிந்திருக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள் அசரடிக்கின்றன. படத் தொகுப்பாளர் காந்த் என்.பி., இந்த த்ரில்லர் திரைக்கதையின் திருப்பங்களையும் கதாபாத்திரங்களின் உளவியல் கோணல்களையும் சரிவரப் புரிந்து, அழகாகக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.
சென்னை, அதன் புறநகர்களின் இரவைத் தன் நேர்த்தியான ஒளியமைப்பில் பதிவு செய்திருக்கிறார் கார்த்திக் அசோகன். கொலையாளியின் முகமூடியில் தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களிலும் கதைக் களத்துக்கான பொருத்தப்பாடுடன் கலை இயக்கத்தில் நேர்த்தி காட்டியிருக்கிறார் பி.எல்.சுபேந்தர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துக்கு தரமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார், டி.இமான்.
அரவிந்தனாக வரும் நவீன் சந்திரா, மனோகராக வரும் திலீபன், சாந்தியாக வரும் அபிராமி, சஞ்சனாவாக வரும் ரியா ஹரி, தாராவாக வரும் ரித்விகா என அத்தனைப்பேரும் கதாபாத்திரங்களாக உணர வைத்திருக்கிறார்கள்.
கதை சொல்லலில் மெல்லோட்டம், கதாபாத்திர எழுத்து, காட்சியமைப்பில் அழுத்தம், அசரடிக்கும் திருப்பங்கள் என இறுதிவரை ஈர்க்கும் இந்தப் படத்தில் வரும் சீரியல் கில்லரின் மீதும் இரக்கத்தை வரவழைக்கிறது, இந்த அசத்தலான முயற்சி.