கிராபிக்ஸில் ஆக்‌ஷன் காட்சிகள்: நடிகர் ஜாக்கி சான் வருத்தம்

பிரபல நடிகர் ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தான் நடிக்கும் படங்களில் டூப் போடாமல் ஒரிஜினலாக ஆக்‌ஷன் காட்சிகளில் பங்கேற்பது இவர் வழக்கம்.

1980-மற்றும் 90-களில் இவர் நடித்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இவரின் ‘ட்ரங்கன் மாஸ்டர்’ (1978), ‘போலீஸ் ஸ்டோரி’ (1985), ‘ரஷ் ஹவர்’ (1998)உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடின.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹாலிவுட் சண்டைக் காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால், உண்மைத் தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “நாங்கள் ஆக்‌ஷன் படங்களில் நடித்த போது எங்களுக்கு இருந்த ஒரேவழி, களத்தில் இறங்குவதுதான்.

ஆனால், இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நடிகர்கள் எதையும் செய்ய முடியும்.

ஆனால் அதில் யதார்த்தம் இல்லை என்பதை உணர முடிகிறது.

கிராபிக்ஸ் என்பது, இரு முனை கூர் கொண்ட வாள்.

ஒருபுறம், நடிகர்கள் தொழில்நுட்ப உதவியுடன் சாத்தியமில்லாத சண்டைகளைச் செய்கிறார்கள்.

மறுபுறம், அதன் ஆபத்து பற்றிய கருத்து மங்கலாகி, பார்வையாளர்கள் உணர்ச்சியற்றத் தன்மையுடன் அதைப் பார்க்கிறார்கள்.

நான் செய்தது போல் உயிரைப் பணயம் வைத்து ஸ்டன்ட்களை செய்ய, யாரையும் ஊக்குவிப் பதில்லை. அது மிகவும் ஆபத்தானது.

நான் எப்போதும் ஒரிஜினலாகவே ஸ்டன்ட்களை செய்கிறேன். அதுதான் நான்.

ஓய்வு பெறும் வரை என்னிடம் இருந்து அது மாறாது. இதை 64 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வரும்போது எந்த முன் தயாரிப்பும் தேவையில்லை.

எல்லாம் மனதில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related posts