சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு – சீமான்

“மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச் சரியாக முடிவெடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்.

இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதி செய்ய, வலிமையான சட்டப் போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ‘மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது’ என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Related posts