சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் கின்னஸ் சாதனை!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் உலக சாதனை முயற்சியாக தேசியக்கொடி வடிவத்தில் ஒருங்கிணைந்து நின்று வடிவமைத்துள்ளனர்.
மாணவர்கள் அனைவரும் காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என தனித்தனியே ஆடைகளை அணிந்து கொண்டு பிரம்மாண்ட தேசியக்கொடி உருவம் வரையப்பட்ட மைதானத்தில் மூவர்ணக் கொடி வடிவத்தில் ஒருங்கிணைந்து நின்று இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்களை மத்திய மந்திரி மீனாட்சி லேகி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சண்டிகர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இல்லந்தோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் புதிய சாதனை முயற்சியாக மாணவர்கள் ஒன்று திரண்டு மூவர்ணக் கொடி போல அலங்கரித்து நின்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை முயற்சிக்கு உறுதுணையாக என்ஐடி அறக்கட்டளை நிறுவனம் கைகோர்த்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, காற்றில் அசையும் கொடி வடிவத்தை கொண்டு வந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Related posts