புலம்பெயர் தமிழராலேயே இலங்கைக்கு விடிவுகாலம்

இலங்கையில் குறைந்தபட்சம் தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே நாங்கள் கோருகிறோம் எனக் குறிப்பிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பின் இரா. சாணக்கியன், புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையருக்கு விடிவு கிடைக்குமென தெரிவித்தார்.

நோர்வேயின் ஒஸ்லோவிலுள்ள இலங்கையரை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையின் தற்போதைய நிலைமை வேதனைக்குரியது. இலங்கையரின் வாழ்க்கை தரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மேம்படுத்த முடியும். தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம்.

விசேடமாக தற்போது இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது. ஊழல் மோசடி, இலஞ்சம் ஆகியவை தற்போதைய நிலைமைக்கு காரணமென குறிப்பிடுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமலிருப்பது தற்போதைய பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது.

73 வருடகால தீர்க்கப்படாத தமிழர்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் உலகளாவிய ரீதியிலுள்ள 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர்.

இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முடியும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களையும் செல்வாக்கு செலுத்தும் என்றார்.

Related posts