வடிவேலுக்கு பெரிய வாய்ப்பு

வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கவுதம் மேனன் பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேல், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டு படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார். இதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டு தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வடிவேல் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் காதல் படங்களை இயக்கி பிரபலமான கவுதம் மேனன் படத்தில் வடிவேல் நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், “வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறேன். அது ஒரு காதல் நகைச்சுவை படமாக இருக்கும். வடிவேலுவால்தான் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும்” என்றார். இது வடிவேலுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்கின்றனர்.

Related posts