கவுன்சிலர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது47). தி.மு.க.வை சேர்ந்த இவர் கீழையூர் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார். இவருடைய மனைவி சூர்யா(26). இவர்களுக்கு குழந்தை இல்லை.

தேவேந்திரன் கடந்த நவம்பர் மாதம் முதல் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த 6-ந்தேதி சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைதொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அன்றே தகனம் செய்யப்பட்டது.

செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார்

இந்த நிலையில் தேவேந்திரன் இறந்த பிறகு அவரது மனைவி சூர்யா நீண்ட நேரம் செல்போனில் தனிமையில் யாருடனோ பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தேவேந்திரனின் உறவினரான சதீஷ்கண்ணா என்பவர் சூர்யாவின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

அதில் சூர்யா, தேவேந்திரன் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரான சந்திரசேகரன் (32) என்பவருடன் செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது.

தங்களது கள்ளக்காதல் விஷயம் தேவேந்திரன் உறவினர்களுக்கு தெரிந்து விட்டதால் சந்திரசேகரன், சூர்யாவுடன் வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனிடம் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வேட்டைக்காரனிருப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்

விசாரணையில், தேவேந்திரன் வீட்டில் வேலை பார்த்த போது சூர்யாவிற்கும், சந்திரசேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தேவேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலை தேவேந்திரன் உணவு சாப்பிட்ட போது சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட தேவேந்திரனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சினை இருந்து வந்த தேவேந்திரன் எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பிறகு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் அவர் கிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால்தான் தேவேந்திரன் இறந்ததாக உறவினர்கள் நம்பியதால் சூர்யாவும், சந்திரசேகரனும் செல்போனில் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். தேவேந்திரன் உறவினர் சந்தேகம் அடைந்ததால் அவர்கள் 2 பேரும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தது தெரிய வந்தது.

Related posts