ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி?

தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து திருமண விழாவின் போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். உங்களுக்கு மட்டும் என்ன தமிழ் பெயரா..? என்று கேட்பீர்கள். அதற்கான விளக்கம் நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன். பல பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள். கலைஞர் அவர்களை பொருத்தவரையில் அண்ணணாக இருந்தாலும், எனது தங்கையாக இருந்தாலும் அனைவருக்கும் தமிழ் பெயர்தான். எனக்கு மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

அது ஒரு காரணப்பெயர். கம்யூனிச கொள்கை மீது கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக அந்த பெயரை எனக்கு சூட்டினார்கள். அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் என்று சொன்னால், எனக்கு ‘அய்யாதுரை’ என பெயர் வைப்பதாக இருந்த‌து. அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று கருதி இருந்தார்கள்.

ரஷ்யாவில் இருந்த ‘ஜோசப் ஸ்டாலின்’ இறந்த நிலையில் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அப்போது ஒரு துண்டு சீட்டு கலைஞர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அந்த துண்டு சீட்டில், உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி எழுதப்பட்டிருந்தது. அங்கேயே பெயர் சூட்டினார்கள். எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன் என்று தெரிவித்தார். என்னுடைய அண்ணன்கள் மு.க.முத்துவாக இருந்தாலும் , மு.க.அழகிரியாக இருந்தாலும், தம்பி தமிழரசுவாக இருந்தாலும், தங்கைகள் கனிமொழியாக இருந்தாலும், செல்வியாக இருந்தாலும் எல்லோருக்கும் தமிழ் பெயர்கள்தான்” என்று அவர் தெரிவித்தார்.

Related posts