ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

திண்டிவனத்தில் நடந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகி புகழேந்தி என்பவரின் திருமணத்துக்கு திடீரென சென்று, ரசிகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர், விஜய் சேதுபதி. ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை மற்றமொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகிறார்கள். எளிமையான நடவடிக்கையால் தொடர்ந்து கவனம் ஈர்த்தும் வருகிறார்.

இந்தநிலையில் திண்டிவனத்தில் நடந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகி புகழேந்தி என்பவரின் திருமணத்துக்கு திடீரென சென்று, ரசிகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த அந்த திருமண விழாவில், திடீரென வந்து மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தியதுடன், மணமகனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தும் வாழ்த்தினார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த மணமகன் மேடையிலேயே கண்கலங்கி அழுதுவிட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதி தற்போது ‘விக்ரம்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘விடுதலை’ மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இந்தி, மலையாள மொழி படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் படுபிசியாக நடித்து வருகிறார்.

Related posts