இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே கொரோனா தாக்கத்தால் திரையுலக பிரபலங்களான மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், ஜெயராம், எஸ்.வி.சேகர், த்ரிஷா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

——

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெயராம். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

இவ்வாறு நடிகர் ஜெயராம் கூறி உள்ளார்.

திரைப்பட நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் எஸ்.வி.சேகர். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் டாக்டரின் அறிவுறுத்தல் படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

——

தமிழில், வஜ்ரம், 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பாவனி ரெட்டி. தெலுங்கு படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் பிக்பாஸ் 5-வது சீசனிலும் பங்கேற்றார். இதில் அவருக்கு 3-வது இடம் கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாவனிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாவனி ரெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத் சென்றுவிட்டேன். ரசிகர்கள் ஆதரவை பார்த்து வியந்தேன். எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது டாக்டர்கள் அறிவுரையோடு வீட்டில் தனிமையில் இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் விரைவில் குணமடையும்படி பாவனி ரெட்டியை வாழ்த்தி வருகிறார்கள்.

Related posts