கடுமையான நிதி சிக்கலில் தேசிய நீர் வழங்கல் சபை

நுகர்வோரிடம் நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபா இன்னும் வசூலிக்கப்படாததால், நீர் விநியோக செயல்முறையில் ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மொத்த நிலுவைத் தொகையில், பாவனையாளர்கள் சுமார் 3700 மில்லியன் ரூபா வும் மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என சபையின் உதவிப் பொது முகாமையாளரான ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.

மேலும், 700 மில்லியன் ரூபாவை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அத்துடன் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனையவற்றிலிருந்து 60 மில்லியன் ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றால் வழங்கப்பட்ட கால அவகாசமே நீர் கட்டணக் கொடுப்பனவுகளில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண உரிய கொடுப்பனவுகளை விரைவில் செலுத்துமாறு மக்களிடம்

அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

——

மார்ச் மாதத்திற்குள் இலங்கை பாரிய அமெரிக்க டொலர் கடனைப் பெற தவறினால், நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் நீடிக்கும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக தியாகங்களைச் செய்து வழிவகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.

24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான இந்த முயற்சியின் அடிப்படையில், பாரிய கடனைப் பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 04 மணி நேர நாளாந்த மின்வெட்டை அமல்படுத்த நேரிடும். நான்கு மணி நேர மின்வெட்டுக்கு செல்வதை விட, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமல்படுத்துவது நல்லது அல்லவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts