உலகில் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இரு மடங்காகியுள்ளது

கரோனா பெருந்தொற்றின் மூலம் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள்தான். உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து பெருந்தொற்றுக் காலத்தில் இரு மடங்காகியுள்ளது. 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியி்ட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
”கரோனா பெருந்தொற்றால் உலகில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம், 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துவிட்டது.
பெருந்தொற்று தொடங்கும்போது 70,000 கோடி டாலராக இருந்த 10 கோடீஸ்வரர்களின் சொத்து தற்போது 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் டாலர் வீதமும், நாள் ஒன்றுக்கு 1300 கோடி டாலர் வீதமும் அதிகரித்துள்ளது.
இந்த 10 கோடீஸ்வரர்களும் தங்களின் 99.99 சதவீத சொத்துகளை நாளையே இழந்தால்கூட, மீதமிருக்கும் அவர்களின் சொத்து, உலகில் உள்ள 99 சதவீத மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கும். உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இந்த 10 கோடீஸ்வர்களின் சொத்து அதிகரித்ததைவிட, பெருந்தொற்றுக் காலத்தில்தான் வேகமாக அதிகரித்தது. அதாவது 5 லட்சம் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
2021, நவம்பர் 3-ம் தேதி, ஃபோர்ப்ஸ் கணக்கின்படி, உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் எலான் மக்ஸ், ஜெப் பிஜோஸ், பெர்நார்ட் அர்னால்ட் குடும்பத்தார், பில் கேட்ஸ், லாரி எலிஸன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஜூகர்பெர்க், ஸ்டீவ் பால்மெர், வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.பாலின சமத்துமின்மையையும் பெருந்தொற்று அதிகரித்துவிட்டது. பாலின சமத்துவம் பெருந்தொற்றுக்கு முன் 99 ஆண்டுகளில் இருந்த நிலையிலிருந்து தற்போது 135 ஆண்டுகள் இடைவெளிக்குச் சென்றுவிட்டது. 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்கள் ஒட்டுமொத்தமாக 80,000 கோடி டாலர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள 100 கோடி பெண்களின் சொத்துகளைவிட 252 ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது.
இனப் பாகுபாட்டையும் பெருந்தொற்று அதிகரித்துள்ளது. 2-வது அலையில், இங்கிலாந்தில், வங்கதேசத்தைச் பூர்வீமாகக் கொண்டவர்கள்தான் பூர்வீக வெள்ளையர்களைவிட 5 மடங்கு அதிகமாக உயிரிழந்திருப்பார்கள்.பிரேசிலில் உள்ள கறுப்பினத்தவர்கள்தான் வெள்ளை இன மக்களைவிட 1.5 மடங்கு அதிகமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில், 3.4 மில்லியன் கறுப்பின அமெரிக்கர்கள் தங்கள் ஆயுட்காலம் வெள்ளையர்களைப் போலவே இருந்திருந்தால் இன்று உயிருடன் இருப்பார்கள். இது நேரடியாக வரலாற்று ரீதியான இனவெறி மற்றும் ஆதிக்கத்துடன் தொடர்புடையது”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts