பொங்கலுக்குத் திரைக்கும் வரும் ‘நாய் சேகர்’

சதீஷ் நடித்துள்ள ‘நாய் சேகர்’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘நாய் சேகர்’. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
பொங்கலுக்கு வெளியாகவிருந்த பெரிய பட்ஜெட் படங்களான ‘ஆர்ஆர்ஆர்’, ‘வலிமை’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் கரோனா அச்சுறுத்தலால் பின்வாங்கிய நிலையில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘நாய்சேகர்’ உள்ளிட்ட சிறிய படங்கள் திரையரங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts