இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது

கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவியை நீடிப்பது குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இலங்கையை முக்கியமான தரப்பாகக்கொண்டு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் புதுடில்லியில் நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

—-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதல்வர் கோரியுள்ளார்.

வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் எழுதியுள்ளார்.

Related posts