டாப் 10 பட்டியலில் மின்னல் முரளி

இந்தியாவின் குறிப்பிடத்தக்க சூப்பர் ஹீரோவாக வெளிவந்துள்ள ‘மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் உலக அளவிலான வாராந்திர தரவரிசையில் ‘ஆங்கிலம் அல்லாத’ பிரிவின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பேசில் ஜோசப் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக டோவினா தாமஸும், சூப்பர் வில்லனாக குரு சோமசுந்தரமும் நடித்து, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘மின்னல் முரளி’. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் காணக் கிடைக்கும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் க்ரிஷ், சக்திமான் உள்ளிட்ட ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது அந்தக் குறையைப் போக்கியுள்ள ‘மின்னல் முரளி’ உலக அளவிலும் கவனம் ஈர்த்துள்ளது.
கிறிஸ்துமஸை ஒட்டி வெளியான இப்படம், நெட்ஃப்ளிக்ஸின் உலகளாவிய வாராந்திர தரவரிசையில் ‘ஆங்கிலம் அல்லாத’ பிரிவுக்கான திரைப்படங்கள் – ஷோஸ் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘மின்னல் முரளி’ உடன் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் பாலிவுட்டின் ‘சூர்யவன்ஷி’யும் உள்ளது.
‘மின்னல் முரளி’யைப் பொறுத்தவரையில், நெட்ஃப்ளிக்ஸில் இதுவரை 59.9 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலின் முதலிடத்தில் ‘விக்கி அண்ட் ஹெர் மிஸ்டரி’ என்ற பிரெஞ்சு திரைப்படம் முதலிடம் பெற்றுள்ளது.’மின்னல் முரளி’ எப்படி? – ‘இந்து தமிழ் திசை’யின் முதல் பார்வையிலிருந்து சில பகுதிகள்:
ஒரு சூப்பர் ஹீரோ அல்லது சூப்பர் வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேவை, ஒரு வலுவான பேக் ஸ்டோரி. அது இல்லையென்றால் திரைக்கதையில் என்ன ஜாலத்தைப் புகுத்தினாலும் அது கம்பி கட்டும் கதையாகி விடும். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே மிக வலுவாகப் பின்னணிக் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இருவருமே சராசரி மனிதனுக்குரிய இயல்பான குணநலன்களுடனேயே இருக்கின்றனர். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறார் இயக்குநர் பேசில் ஜோசப்.
ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ‘மின்னல் முரளி’. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் நாம் பார்க்கும் விமானத்தைத் தாங்கிப் பிடிப்பது, ஊரில் இருக்கும் கட்டிடங்களை எல்லாம் ஹீரோவும் வில்லனும் கட்டிப்புரண்டு தவிடு பொடியாக்குவது போன்ற பிரம்மாண்டக் காட்சிகள் எதுவும் இதில் கிடையாது. நம் பக்கத்துத் தெருவில் ஒரு சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படி இருப்பான்? அதற்கு சமமான சக்திகள் கொண்ட இன்னொரு எதிரியை அவன் சந்தித்தால் என்ன நடக்கும்? – இதைத்தான் ‘மின்னல் முரளி’ பேசுகிறது.
விரிவாக வாசிக்க > முதல் பார்வை: மின்னல் முரளி – மார்வெல், டிசி பாணியில் அட்டகாசமான இந்திய சூப்பர் ஹீரோ!

Related posts