புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

எனக்கு இது தனிப்பட்ட இழப்பு என்று புனித் ராஜ்குமார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் இன்று (அக்டோபர் 29) காலமானார். உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது புனித் ராஜ்குமார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
“பவர் ஸ்டாரும், கன்னட சினிமாவின் சாதனை நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவைக் கேட்டு அதிக அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்துள்ளேன். பல தசாப்தங்களாக எங்களின் குடும்பங்கள் மூலம் அன்பான ஒரு பிணைப்பைப் பகிர்ந்து வருகிறோம். அதனால் எனக்கு இது தனிப்பட்ட இழப்பு. நட்சத்திர அந்தஸ்து கொண்டிருந்தாலும் மிகவும் பணிவான மனிதராக இருந்தார்.தலைவர் கலைஞர் காலமானபோது எங்களின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தனது குடும்பத்தின் அனுதாபங்களை எங்களுக்குத் தெரிவித்த அந்தக் கனிவான செயல் இன்னும் என் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது. சமகாலத்தின் மிக உயர்ந்த திறமையாளர் ஒருவரைக் கன்னடத் திரைத்துறை இழந்துவிட்டது. இந்த ஈடில்லாத இழப்பில் வாடிக் கொண்டிருக்கும் புனித்தின் குடும்பத்துக்கும், கர்நாடக மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts