சரத்குமார் நேரில் அஞ்சலி; உடலைப் பார்த்துக் கதறி அழுதார்

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் பிரபலமான நடிகர் என்பதால், கர்நாடக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவரது உடல் இரவு 7 மணி வரை சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம.டி.பி.நாகராஜ், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து அந்த மைதானம் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அழுகுரல் விண்ணை தொடுவதாக இருந்தது. மைதானம் முன்பு அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்ததால், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரசிகர்கள் வரிசையில் நின்று புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ரசிகர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். ரசிகர்கள் விடிய விடிய அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களை கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பெங்களூருவில் கன்டீரவா ஸ்டுடியோவில் இறுதிச்சடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது தந்தை ராஜ்குமாரின் சமாதிக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி கன்னட நடிகர்கள் யஷ், துனியா விஜய் உள்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாளை ரசிகர்களின் கூட்டம் மிக அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாள் முழுவதும் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, நடிகர் – இயக்குநர் பிரபுதேவா, சரத்குமார் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார் சரத்குமார். அங்கிருந்தவர்கள் அவரைத் தேற்றினார்கள்.

சென்னையில் சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடைபெற்றபோது, தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் புனித் ராஜ்குமார்.

புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக சரத்குமார் தனது டுவிட்டர் பதிவில், “எனது இனிய நண்பர் புனித் ராஜ்குமார் மறைந்துவிட்டார் என்ற நம்பமுடியாத செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர். நமது நாட்டின் ஒட்டுமொத்தத் திரைத்துறையைக் குறிப்பாக கர்நாடக திரைத் துறையினரை இந்த சோகத்திலிருந்து தேற்ற, ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.

விதியின் மர்மமான வடிவம், திரைத்துறையை மட்டுமல்ல, புனித்தின் ஒட்டுமொத்த நண்பர்கள் உலகத்தையும் புரிந்துகொள்ள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், சக நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த அனுதாபங்கள். உன் இழப்பை நாங்கள் உணர்வோம். நீ என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்வாய் புனித்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts