‘என்றாவது ஒருநாள்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது

விதார்த், ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் ‘என்றாவது ஒருநாள்’. இந்த படத்தை வெற்றி துரைசாமி இயக்கி உள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. என்றாவது ஒரு நாள் படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

இது குறித்து இயக்குனர் வெற்றி துரைசாமி கூறும்போது, “என்றாவது ஒருநாள் திரைப்படம் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் மற்றும் இரண்டு காளைகளை அன்புடன் வளர்க்கும் ஒரு விவசாய குடும்பத்தை பற்றிய கதையே இந்த படம். வறுமை காரணமாக தங்களுடைய கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதும், இடைத்தரகர்கள் அந்த குடும்பத்தை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதையும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் எத்தகைய போராட்டங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது. சில உண்மை சம்பவங்களை முன்மாதிரியாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது’’ என்றார்.

நடிகர் விதார்த் கூறும்போது “என்றாவது ஒருநாள் கதையை கேட்ட போது என்னை கவர்ந்தது. இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதைத் தான் நான் விரும்புகிறேன்’’ என்றார்.

நடிகை ரம்யா நம்பீசன் கூறும்போது, “இந்த படத்தில் மாட்டு வண்டி ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்து நடித்தேன். இந்தப் படம் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வாழ்வியலையும் பேசுவதால் வெற்றி பெறும்” என்றார். குழந்தை நட்சத்திரமாக ராகவன் நடித்துள்ளார்.

Related posts