இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்..

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன் என சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாராக இருப்பவர் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ் . இவர் 3 வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார். இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாமியார் கடந்த ஆண்டு மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இதற்காக அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்பாக அமர்ந்தவாறு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை நீட்டித்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இந்த நிலையில், சாமியார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ,

வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன் என கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Related posts