வி.சி.குகநாதன் கதையில் நடிக்கும் யோகி பாபு

வி.சி.குகநாதன் எழுதியுள்ள கதையில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ‘தேன் நிலவில் மனைவியை காணோம்’. இந்தப் படத்தின் கதையை பிரபல கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் வி.சி.குகநாதன் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதியுள்ளார் வி.சி.குகநாதன். இதைக் கேள்விப்பட்ட யோகி பாபு நேரடியாகச் சென்று குகநாதனைச் சந்தித்து கதையைக் கேட்டதும், அதில் உள்ள மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும், இதில் மலையாளத்தில் பிரபல நாயகியாக வலம் வருபவர் நாயகியாக நடிக்கவுள்ளார். இவருடன் புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, நான் கடவுள் ராஜேந்திரன், சிவசங்கர் ஆகியோருடன், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக கணேசன், இசையமைப்பாளராக தேவா, வசனகர்த்தாவாக புகழ்மணி, பாடலாசிரியர்களாக சினேகன், ஹிருதயா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவில் திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Related posts