பிசாசு 2-ம் பாகம் பேய் படத்தில் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியான பிசாசு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். இதில் பூர்ணா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா பேயாக வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியும் பிசாசு 2-ம் பாகத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து விஜய்சேதுபதி கூறும்போது, “பிசாசு-2 கதையை மிஷ்கின் சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் உருவாக்கி இருந்ததை சொல்லும்போது பெருமையாக இருந்தது. அவர் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். பிசாசு-2 படத்தில் எனக்காக பிரத்யேகமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளார்” என்றார்.

பிசாசு-2 படத்தின் முதல் தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் ஆண்ட்ரியா குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு கையில் சிகரெட்டுடன் தலைகீழாக தொங்கியபடி இருந்தார். இந்த போஸ்டர் வலைத்தளத்தில் வைரலானது. பிசாசு-2 விரைவில் திரைக்கு வர உள்ளது.

Related posts