உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 37

சுகத்திற்கு வழிநடத்தும் வேதனை.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந் திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. வெளிபடுத்தல் 2:5

மனந்திரும்புதல் என்பது, சிந்தனையை மாற்றுதல், போகும்வழியை திருப்புதல், வழியைத்திருப்பி வேறுவழியில் செல்லுதல் எனப்பொருள்படும். மனந்திரம்புதல் ஒரு வேதனையான முயற்சியாகும். இதனை (மனந்திரும்புதலை) சுகத்திற்கு வழிநடத்தும் வேதனை என கூறலாம். இதன் நிமித்தமாக மனந்திரும்புபவர்கள் நன்மையை, ஆறுதலை அடைகிறார்கள். இந்த உண்மையை மனிதகுலம் அறிய முடியாததால் எரிச்சல், பொறாமை, பகை, அழிவு என இன்னும்பல துயர சம்பவங்கள் இன்று மக்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.

மனந்திரும்புதல் என்பது, தேவன் நம்மை மன்னிக்கவேண்டும் என்பதற்காக நமது வாழ்க்கையை சரிசெய்வது அல்ல. தேவன் உங்களை மீண்டுமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அவர் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தை மனந்திரும்புதல் என்று அழைக்க முடியாது. நாம் தேவனிடம் திரும்பிச்செல்வதே மனந்திரும்புதல் ஆகும். இதனையே நாம் முதலில் வாசித்தோம்.

உதாரணமாக பல குடும்பங்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து தவறானவழியில் போகிறார்கள். சிலவேளைகளில் பிள்ளைகளின் எதிர்கால நன்மைகருதியும், பெரியவர்களின் அன்பின் அறிவுறுத்தலினாலும் மீண்டும் ஒன்று சேருகிறார்கள். அவர்கள் தமது அனுபவத்தைக் கூறும்போது, பிள்ளைகளின் நன்மை கருதி அந்த வேதனையை சகித்தேன் என்பார்கள். இதுதான் உண்மை. இந்த உண்மையை உங்களைசுளச் சூழவுள்ள மக்களிடம் கேட்டறிந்திருப்பீர்கள்.

அப்படியானவர்களில் எத்தனைபேர் தமது தவறைக்குறித்து ஒருவர் மற்றவரிடம் மனந்திறந்து பேசி மன்னிப்புடன் ஒப்பரவானவர்கள்? அவ்வாறு உண்மையுடன் கூடிய மன்னிப்பால் ஒப்பரவாகி வாழும்போது, ஆதியில் அதாவது ஆரம்பத்தில் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பு வெளிப்படுகிறது. இதனை வேதம் ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் . .. ஆகையால், நீ இன்ன நிலைமை யிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியை களைச் செய்வாயாக என்றுகூறுகிறது. வெளி.2:5.

நாம் ஆதியில் செய்தகிரியைகளை நாம் செய்யவேண்டும் என்றால், மனந்திரும்பியே – மனதைதிருப்பியே ஆகவேண்டும். இப்பொழுது புரிந்திருப்பீர்கள் மனந்திரும்புதல் என்றால் என்னவென்று.

வேதம் சொல்கிறது, எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையை இழந்து போய்விட்டார்கள் என்று. தேவனிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. நாம் மன்னிப்பைக் கேட்பதற்கு அதிக காலம் தாழ்த்துகிறோம். அதன் பலன் விடுதலை பெற முடியாமல் நமது குற்றத்தை நாட்களில் இருந்து பல வருடங்கள்வரை சுமந்து கொண்டு வாழ்கிறோம். நாம் ஏன் நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்? இன்றே தேவனிடம் கேள்.

பிடிவாதமுள்ள மனந்திரும்ப மனதில்லாத மக்களிடத்தில் அவர் காத்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. (ஏசாயா 30:18) ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.

பாவத்தை மன்னிப்பதற்கான தேவனுடைய ஆர்வம், சிலுவையில் இயேசு அனுபவித்த பாடுகளின்மூலம் மிகவும் தெளிவாகிறது. அவருடைய மரணம் நமது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்துவதற்கு போதுமானதாகும். எனவேதான் உலகத்திலுள்ள அனைவருக்கும் அவரால் பாவமன்னிப்பை அளிக்க முடிகிறது. எபிரேயர் 4:16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே, கிருபையுள்ள தேவனிடம் சேரக்கடவோம் என வேண்டுகோள் விடுகிறது.

இதன் அர்த்தம், தைரியமாக என்ற வார்த்தையின் பொருள் நம்பிக்கையாக என்பதாகும். முரட்டாட்டமாக அல்ல. விசுவாசத்தால் வரும் நன்மை இலவசமானது. அதாவது மலிவானதல்ல. ஏற்ற சமயத்தில் என்றால், தாமதமில்லாமல் என்பதாகும்.

உங்களுக்கு பாவமன்னிப்பு தேவையா? அதை அளிப்பதற்கு தேவன் காத்துக் கொண்டு இருக்கிறார். நீங்கள் மனந்திரும்பி, தாமதமில்லாமல் தைரியத்தோடு அவரை கூப்பிடும்போது, அவர் உங்களைக் காத்திருக்க விடமாட்டார். உங்களின் குரலை அவர் கேட்டவுடன் உங்கனுக்கு உருக்கமாய் இரங்குவார். தேவனை நோக்கி கூப்பிட்டு, மனந்திரும்பி, பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு அமைதியாகவும், ஆறுதலாகவும் வாழ்வோம்.

மன்னிப்பு இலவசமானது. ஆனால் நாம் அதை உண்மையுள்ள மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro.Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts