மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.யான மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தூதுவர் பதவியை பொறுப்பேற்கும் வகையில், இத்தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர், அமெரிக்க தூதுவராக இருந்த ரவிநாத் ஆரியசிங்க அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இதற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் அவர் பலமுறை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, களுத்துறை மாவட்டத்தில் 8 ஆசனங்களை வென்றிருந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க 58,514 விருப்பு வாக்குகளை பெற்று விருப்பு வாக்கு பட்டியலின் 8ஆவது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய இப்பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள மஞ்சுள லலித் வர்ணகுமார, இராஜினாமா செய்யவுள்ள மஹிந்த சமரசிங்கவினால் வெற்றிடமாகவுள்ள எம்.பி. பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுள லலித் வர்ணகுமார, கடந்த பொதுத் தேர்தலில் 46,542 விருப்பு வாக்குகளைப் பெற்றதோடு, மதுராவல பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts