தனுஷுக்கு நாயகியாக இந்துஜா ஒப்பந்தம்

‘நானே வருவேன்’ படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடிக்க இந்துஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் ‘நானே வருவேன்’. கடைசியாக இருவரும் இணைந்து பணிபுரிந்த படம் ‘மயக்கம் என்ன’. தற்போது ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘நானே வருவேன்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தனுஷ், செல்வராகவன் ஆகியோர் இதர படங்களில் கவனம் செலுத்தி வருவதால், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
தற்போது, இந்தப் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இந்துஜா. செல்வராகவன் இயக்கம், தனுஷுக்கு நாயகி என்பதால் இந்தப் படம் கண்டிப்பாகத் திரையுலகப் பயணத்தை மாற்றியமைக்கும் என்ற மகிழ்ச்சியில் இந்துஜா இருக்கிறார்.

Related posts