பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமை

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது.

பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசே நடத்தியுள்ள செயலாக இருக்கிறது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதம் நடத்த வேண்டும். விவாதத்தின் போது பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாடாளுமன்றம் 12 நாட்கள் நடைபெற்றுள்ளது. 12 நாட்களில் ஒருநாள் கூட சரியாக இயங்கவில்லை.அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கிய நிலையில், முதல் இரண்டு வாரங்களில் 107 மணிநேரங்களில் பாராளுமன்றம் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் அமளி காரணமாக ரூ.133 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் பணம் வீணடிக்கப்ட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று 14 எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றாக கூடி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போட்டி பாராளுமன்றத்தை வெளியில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும் ‘பெகாசஸ்’ மற்றும் பெட் ரோல்- டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில் பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் சைக்கிளில் செல்வது என்று முடிவு எடுத்தனர்.

கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, தேசியவாத காஙிரஸ் சுப்ரியா சுலே, சிவசேனாவின் சஞ்சய் ராவத் , தி .மு.க. சார்பில் கனிமொழி எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல். டீசல் விலை உயர்வு. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே இதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுதொடர்பான பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராகநாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாற வேண்டும். நமது குரல் சக்தி வாய்ந்ததாக ஒலிக்க வேண்டும்என்று கூறினார்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார். அவருடன் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.மத்திய அரசை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருவதால் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் சென்றுகொண்டுள்ளது.

Related posts