ஹிஷாலினியின் சடலம் நேற்று தோண்டியெடுப்பு

ரிஷாத் பதியுதீனின் எம்.பி வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமான டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஷாலினியின் சடலம் நேற்று (30) இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து சென்ற சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மற்றும் கண்டியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் ஹிஷாலியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

டயகம பிரதேசத்திற்கு நேற்றுக் (30) காலை 9.00 மணியளவில் அதிகாரிகள் குழுவினர் சென்றதன் பின்னர் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. படிப்படியாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியின்போது அங்கு புதைகுழி மண் பரிசோதிக்கப்பட்டது. கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கமைய தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மழை வந்தால் பாதுகாப்பாக இருக்க மயானத்தில் புதை குழிக்கு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. சடலம் அடங்கிய பேழையை நேற்று சரியாக 12.20க்கு பாதுகாப்பாக குழியிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேசையில் சடலம் வைக்கப்பட்டு சவப்பேழை திறக்கப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.

சடலத்தை அடையாளம் காட்ட விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்புக்கமைய சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்து சடலத்தை நீதவான் முன்னிலையில் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கண்டி, பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலத்தை அடையாளம் காட்ட வந்த உறவினர்களின் கண்களில் நீர் கொட்டினாலும் சிறுமியின் தாய் கதறி அழுவதற்கு முடியாமலிருந்தார். உனக்கு நீதி கிடைக்கும் அதுவரை அழமாட்டேன் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தாய் ஆக்ரோசமாக தெரிவித்திருந்தார். சிறுமியான ஜூட்குமார் ஹிஷாலினி தீக்காயங்களுக்குள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில் கடந்த 15.07.2021 அன்று மரணமானார்.

Related posts