தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை

தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் சண்முகம் (வயது 56). இவர், மதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், தி.மு.க. சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர், சாலை காண்ட்ராக்ட் பணிகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். சாலை காண்ட்ராக்ட் பணிகளில் சண்முகத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாலாஜாபாத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் சண்முகம் சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு தினமும் காலையில் வந்து விட்டு, இரவில் வாலாஜாபாத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் சண்முகம் மதூர் கிராமத்தில் இருந்து வாலாஜாபாத் வீட்டிற்கு செல்லும் போது, மதூர் பெட்ரோல் பங்க் அருகாமையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு முகத்தில் பலமாக தாக்கி, கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பினர். அதன்பின் அந்த மர்ம கும்பல் திருமுக்கூடல் பகுதியில் இரும்பு ராடு மற்றும் இருசக்கர பல்சர் பைக்கை விட்டு விட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் நேரில் பார்வையிட்டு, மர்ம கும்பலை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று உள்ளதா என்ற கோணத்தில் அ.தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts