துக்ளக் தர்பார்’ வெளியீட்டில் மாற்றம்..

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்பில் ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
இதில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியது. ஆனால், ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், தொலைக்காட்சி உரிமம் சன் டிவியிடம் இருந்ததால் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், இறுதிவரை சன் டிவி நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்புக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்ப சன் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சன் டிவி ஒளிபரப்புக்குப் பிறகு, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சன் டிவி ஒளிபரப்பு முடிந்த அன்றைய தினமே ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுவரை சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.தற்போது விஜய் சேதுபதி நடித்த படமே நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதால் திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related posts