ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் இன்று..

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பை நடத்தியபோது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தினர்.

பின்னர் சிறிது இடைவெளிக்கு பிறகு கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்போடு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு சென்னை திரும்பி உள்ளார்.

இன்னும் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய சில காட்சிகள் பாக்கி உள்ளதால் அதற்கான படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து இன்றும் (20-ந்தேதி), நாளையும் நடத்த உள்ளனர். இந்த 2 நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். அதோடு அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிகின்றன.

மற்ற சில நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை கொல்கத்தாவிலும், லக்னோவிலும் படமாக்குகின்றனர். வருகிற 25-ந்தேதி அண்ணாத்த படத்துக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசுகிறார். கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட பிற தொழில் நுட்ப பணிகளும் நடக்க உள்ளன.

தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார்.

Related posts