நாட்டை எதிர்வரும் செப்டம்பரில் முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு

கொரோனா வைரஸ் பரவலில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படுமென கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாட்டில் அனைவருக்கும் ஒரு தடுப்பூசியாவது பெற்றுக்கொடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு நாட்டிற்குள் பிரவேசிப்ப தற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் 15 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், 08 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளும் ஒன்றரை மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் அவற்றில் உள்ளடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தபோது அது தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்தனர். எனினும் தற்போது போதியளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள், மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளும் மிக விரைவில் நாட்டுக்கு கிடைக்கவுள்ளன. மொத்தமாக சுமார் 05 மில்லியன் தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கவுள்ளன.

ஜூலை இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மேல்மாகாணம் முழுவதற்கும் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன்படி செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு தடுப்பூசியாவது பெற்றுக் கொடுக்கப்படுமென உறுதியாக கூறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts