இளம் இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் நகைச்சுவை படத்தை பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் வியந்து பேசி இருந்தார். அந்த படத்தின் தொழில் நுட்பங்களை தனக்கு சொல்லித்தர முடியுமா? என்றும் கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மைக்கேல் மதன காமராஜன் படம் மாஸ்டர் கிளாஸ் என்றால் நான்தான் அதன் மாஸ்டர் என்று அல்ல. திரைப்படங்களின் நுணுக்கங்களை கற்றுக்கொடுக்க பெரிய தியாகம் தேவை. அது ஒரு தாய்க்கு சமமானது. நான் ஆர்வம் உள்ள ஒரு மாணவன். ஆசிரியரை விட சுயநலம் கொண்டவன். வகுப்பில் கற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன். ஆனால் வகுப்பில் உரையாற்றும் நிலைப்பாடு இல்லை. உரையாற்றுவதைவிட கற்பதில் எனக்கு பெரிய பசி இருக்கிறது. எனக்கு எப்போதும் அதிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அனந்து, சிங்கீதம், பாலசந்தர் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள பசியே காரணம். இவர்கள் கற்பிப்பதில் உயர்ந்தவர்கள். எனக்கு குருவாக இருந்தவர்கள் எப்போதும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

தற்போதைய தலைமுறை இயக்குனர்கள் 30 வருடங்களுக்கு முன்பு செய்ததை பார்த்து எதிர்காலத்தில் அதனை மிஞ்சும் படைப்பை உருவாக்க வேண்டும். நகைச்சுவையை வியாபாரமாக்க வியர்வை சிந்த தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் நகைச்சுவைக்கு மற்றவர்கள் சிரிப்பார்கள். ஒரு கோமாளியிடம் கேட்டால் சிரிக்க வைக்கப்படும் கஷ்டத்தை உங்களுக்கு சொல்வார். எதுவும் எளிதாக கிடைத்துவிடாது’’ என்று கூறியுள்ளார்.

Related posts