29 வீரர்கள் பலி; 40 பேர் காயங்களுடன் மீட்பு

பிலிப்பைன்ஸில் தென் மாகாணமான சிகாயன் டி ஓரோ நகரில் இன்று ராணுவ விமானம் தரையிறங்கும்போது, திடீரென தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 29 பேர் பலியானார்கள். இடிபாடிகளில் இருந்து 40 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் ரோலன்ஜானா கூறுகையில், ”அமெரிக்க விமானப் படை எங்களுக்கு உதவியாக வழங்கிய சி-130 ஹெர்குலஸ் வகை விமானம்தான் இன்று விபத்துக்குள்ளானது. சுலு மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரான பதிகுல் என்ற நகர் அருகே இருக்கும் பங்கால் கிராமத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
சாகயான் டி ஓரோ நகரிலிருந்து ராணுவ வீரர்களை சுலு நகருக்குக் கொண்டுசென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் விமானிகள் 3 பேர், 5 ஊழியர்கள் உள்ளிட்ட 92 பேர் பயணித்தனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கடுமையான மழை காரணமாக ஓடுபாதை தெரியாமல் விமானம் விபத்துக்குள்ளானதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தில் 29 வீரர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ராணுவ அதிகாரி சிர்லிட்டோ சோபிஜனா கூறுகையில், ”சுலு மாகாணத்தில் உள்ள அபு சயாயப் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நீண்டகாலமாகப் போராடி வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்கும் விதத்தில் ராணுவ வீரர்கள் சிகாயன் டி ஓரோ நகரிலிருந்து சுலு மகாணத்துக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்து உண்மையில் துரதிர்ஷ்டமானது. ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச் சென்று மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. கடுமையான மழையால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

Related posts