வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்

வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்துக்காக இளையராஜா இசையமைத்து வருகிறார்.
விடுதலை’ படத்தைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’, தனுஷ் படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியானதிலிருந்து பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்த போது, “உண்மை தான். கமல் – வெற்றிமாறன் கூட்டணி படத்தைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளன. அனைத்தும் முடிவான உடன் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.
கமல் – வெற்றிமாறன் கூட்டணி தொடர்பான செய்தி வெளியானதிலிருந்து சில திரையுலக பிரபலங்களும் ஆவலாக இருப்பதாகக் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts