கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை 262 பில். ரூபா செலவு

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30) அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சுக்குரிய அனைத்து நிறுவனங்களதும் தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகலவினால் ‘சவாலுக்கு மத்தியில் சுபீட்சத்தை நோக்கி’ என்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மற்றும் எதிர்கால நோக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

கொவிட்19 முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர், சமூக பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான மூன்றாவது அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த கடினமான சூழ்நிலையிலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட நிவாரணம் பெற தகுதியான மக்களுக்காக பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எஸ். ஆர்.ஆட்டிகல 2019ஆம் ஆண்டு தீர்க்கப்படாதிருந்த 423 பில்லியன் நிலுவை தொகையை செலுத்திய பின்னரே கடந்த வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வட்டி விகிதத்தை குறைத்து கடன் நிவாரணங்களை வழங்கியும் பணவீக்கத்தை 04 சதவீதத்திலிருந்து 06 சதவீதமாக பேணுவதற்கு முடிந்ததாகவும், கடந்த மே மாதம் அது 6.1 சதவீதம் அல்லது 6.2 வரை அதிகரித்த போதிலும் அதனை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts