முககவசம் அணியாமல் வந்தவருக்கு துப்பாக்கிச் சூடு இந்தியாவில்..

உத்தரப்பிரதேச மாநிலம், பரோலி மாவட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியரான ராஜேஷ் குமார் என்பவர் பணப் பரிவர்த்தனைக்காக வந்துள்ளார். அப்போது, ராஜேஷ் குமார் முக கவசம் அணிந்திருக்கவில்லை.

முககவசம் அணியாமல் வங்கிக்குள் நுழைய முயன்ற ராஜேஷை வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஷ்ரா தடுத்து நிறுத்தி, முககவசம் அணியாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால்,ரெயில்வே ஊழியர் ராஜேசுக்கும் வங்கி காவலாளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, ராஜேஷ் குமாரின் மனைவி அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கடைக்குச் சென்று முககவசம் வாங்கிக் கொடுத்துள்ளார். ராஜேசும் முககவசத்தை அணிந்துகொண்டு மீண்டும் வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

ஆனால், வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா முகக்கவசம் அணிந்து வந்த போதும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி ராஜேஷ் குமாரை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா திடீரென ராஜேஷ் குமாரை கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார். காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் குமாருக்கு அவரது மனைவி கதறி அழுதபடி முதலுதவிகள் செய்து கொண்டே ‘என் கணவரை அநியாயமாகச் சுட்டு விட்டீர்களே..!’ என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். துப்பாக்கி சுடூம் சத்தம் கேட்டு வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களூம் அதிர்ச்சி அடைந்தனர்.துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ராவை கைது செய்து போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts