உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 21. 24

தேடி வந்த நேசர்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மாhக்கிற்காக பிரார்த்திப்போம்.
நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். யோவான் 15:16
இன்று மானிட உலகம் பலபிரச்சனைகளினால் வாடுகிறது. மனஅமைதியைத் தேடுகிறது. மனிதன் நிம்மதிக்காக ஏங்கி அதை எங்கே கண்டடையலாம் என்று வாஞ்சித்துக் கதறுகிறான். இயற்கையாகவே மனுசனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு வல்லமை இருக்கிறதை மனிதன் உணருகிறபடியால் அந்த வல்லமையுள்ள ஒருவர்மூலம்தான் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணுகிறான். தேடியும் ஓடுகிறான். இயற்கையாகவே மனிதனுடைய உள்ளத்திலே மெய்ப்பொருளைக் கண்டடைய வேண்டும், இறைவனைக் கண்டடைய வேண்டும், மனஅமைதியை – சாந்தியைத்தரும் சக்தியை கண்டடைய வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அதற்காக மனிதன் பலஇடங்களுக்கு ஓடிச்செல்கிறான். சிலர் பாதயாத்திரை செய்கிறார்கள். சிலர் புண்ணிய ஸ்தலங்களை நாடி ஓடுகிறார்கள். சிலர் தங்களை வருத்தி – காயப்படுத்தி அமைதியைக் அடைய விரும்புகிறார்கள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, எந்தவொரு மனிதன் உண்மையாக மெய்ப்பொருளை அதாவது, இறைவனைக் காணவேண்டுமென்று – தரிசிக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறானோ, அவனுக்கு கடவுள் – இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார் என்று (சங்கீதம் 4:3) வேதம் வேதம் நமக்கு சொல்லுகிறது. மனிதன் தேவனைத் தேடிச்செல்வது ஒருபக்கம் இருக்க, மனிதனைத் தேடிவருகிற தெய்வம் ஒருவர் இருக்கத்தான் செய்கிறார். அவர் மனிதனை நேசித்தபடியினாலே மனிதனைச் சந்திக்க விரும்பி பரலோகத்திலிருந்து இவ்வுலகத்திற்கு இறங்கி வந்தார். மனிதனைத் தேடிவரும் இறைவனை அலைகள் வாசகநேயர்களுக்கு அறிமுகப்படுத்தவே இத்தியானத்தை எழுதுகிறேன். சந்தர்ப்பம் தந்த நிறுவனத்திற்கு எனது நன்றிகள்.

உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்கிற ஒளியானவர் இயேசுகிறிஸ்து. அவரை நீங்கள் தேடி பல இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களின் இருப்பிடத்திலே அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார். அவர் மனிதனைத் தேடிவந்த தெய்வம். மனிதனுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி ஜீவனைக் கொடுத்த தெய்வம். உயிரோடு எழுந்த தெய்வம். இன்றைக்கும் உங்கள் அருகில் இருக்கிற தெய்வம். நீங்கள் எதிர்பார்க்கிற மன அமைதியையும், சாந்தியையும் தரக்கூடிய தெய்வம்.

வேதம் சொல்கிறது, ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என, லூக்கா 12:15 இல். ஆத்துமாவில் சமாதானம் தருகிற ஒரே ஒருவர் இயேசுகிறஸ்துதான். அந்த இயேசுகிறிஸ்துவை அறிந்து கொள்ளாமல் ஒருவன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவன் அமைதியற்று மரிப்பான். நித்தியத்தை வேதனையில் களிப்பான். ஆகவேதான் இயேசுகிறிஸ்து நம்மைத் தேடிவருகிறார். அவர் எவ்வளவு அருமையான தெய்வம். அன்பும் பரிசுத்தமும் வல்லமையும் நிறைந்தவர். பாவமன்னிப்பையும், மெயச்சமாதானத்தையும் இலவசமாக கொடுக்கிறவர்.

இதை வாசிக்கிற தேவனுடைய பிள்ளையே, உன்னையும் இயேசுகிறிஸ்து தேடி வருகிறார். அவர் உன்னை உள்ளன்போடு நேசிக்கிறார். உனக்காவே அவர் கல்வாரி சிலுவையிலே தன்ஜீவனைக் கொடுத்தார். மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்றைக்கும் உன் அருகில் இருக்கிறார். அவருடைய அன்பின் கரங்கள் உன் இருதயக் கதவை தட்டிக்கொண்டே நிற்கிறது. வேதம் இதனை, இதோ, வாசற்படியிலே நின்று கதவை தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான் என தேவனின் அன்பை வெளிப்படுத்துகிறது, (வெளிப்படுத்தல் 3:20).

தேவபிள்ளையே, மன அமைதியுடன்கூடிய சமாதானத்தை நீ தேடுகிறாயா? அதற்கு ஒரே வழி இயேசுவண்டை வருவதுதான். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன் என்று நமது ஆண்டவராகிய இயேசு அன்போடு அழைக்கிறார். அந்த அழைப்பிற்கு இருதயத்தில் இடம் கொடுத்து, இயேசுவே என் உள்ளத்தில் வாரும், எனக்கு புது வாழ்வு தாரும், எனக்கு புது ஜீவன் தந்து வழிநடத்தும் என்று கேளுங்கள். நிச்சயமாகவே அவர் உங்களை அரவணைத்து, ஆசீர்வதித்து, சமாதானத்துடன்கூடிய வாழ்வை கட்டளையிடுவார்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதராக !

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts