16 தமிழ் இளைஞர்களுக்கு இன்று பொதுமன்னிப்பு

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 16 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 சிறைக்கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் இன்று விடுதலையாவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களைத் தவிர மேலும் 77 சிறைக்கைதிகள் நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 225 மரண தண்டனை கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 25 பேரும் தண்டப் பணத்தை செலுத்த முடியாது சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் 45 பேரும் இளம்குற்றவாளிகள் 07 பேரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 225 சிறைக் கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க அவ்வாறு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் பெயர்ப் பட்டியல் நீதியமைச்சினால் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெளத்த விசேட தினமான பொசொன் தினத்தையொட்டி இன்றையதினம் (24) சிறைக்கைதிகள் 93 பேருக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், சட்டத்திற்கு முரணனாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 16 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டதோடு, மேலும் 77 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடன் கொலைக் குற்றம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.முன்னாள் எம்.பி.யும் ஹிருணிகா பிரேமசந்திரவின் தந்தையுமான பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம் குறித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால், துமிந்த சில்வாவை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts