இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 40,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கண்டி, மாத்தளை, குளியாப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றையதினமும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதால் தொடர்ந்தும் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வாழைத்தோட்டம், மருதானை பிரதேசங்களில் ட்ரோன் மூலம் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது பயணக்கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரை ட்ரோன் மூலமான நடவடிக்கையில் மொத்தமாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

—–

ஏறாவூர் சம்பவம் தொடர்பில், இராணுவ வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்வத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடிய பலரில் ஒரு சிலரை, வீதியோரதில் கைகளை உயர்த்தியவாறு, முழங்காலில் நிற்க வைத்தமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் பொதுமக்கள் வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயணத்தடை அமுலில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் நடமாடுகின்றன. அதேபோல பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம்.
இந்நிலையில் ஏறாவூரில் தமது அன்றாடத் தேவையை நிறைவேற்ற வந்த பொதுமக்களை மட்டும் வதைக்கின்ற செயல் நாட்டில் நியாயமான சட்டவாட்சி இல்லை என்பதை உறுதிப் படுத்துகின்றது. சட்டம் பொதுவாக எல்லோருக்கும் தான் அமுல் படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts