வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்

வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மத்தியில் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்துப் பராமரிப்பது பிரபலமாகி வருகிறது. மாதவன், கார்த்தி, சமந்தா, நமீதா உள்ளிட்ட பலர் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர்.
அவர்களுடைய வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இந்த கரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் தோட்டத்தை அமைத்துப் பராமரித்து வருகிறார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை நேற்று (ஜூன் 13) தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படங்கள் வைரலாகி வருகின்றன.
காய்கறித் தோட்டத்தில் நின்றுகொண்டு சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது:
“இதுதான் என் காய்கறித் தோட்டம். கரோனா ஊரடங்கிற்குக் கொஞ்ச நாள் முன்புதான் இதனைத் தயார் செய்தேன். இப்போது இங்கிருந்துதான் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் எல்லாம் பயன்படுத்துகிறோம். இதை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்றுதான் இந்த வீடியோ. இந்தத் தோட்டத்தை இன்னும் முழுமையாகத் தயார் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். முழுமையாகத் தயார் செய்தவுடன் மீண்டும் உங்களுக்குக் காட்டுகிறேன். அனைவரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும் இதேபோன்று செழுமையாக மாறும்”.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related posts