சூர்யா 40′: அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்

தனது பிறந்த நாளை முன்னிட்டு, ‘சூர்யா 40’ அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
முன்னணி இயக்குநரான பாண்டிராஜ் நேற்று (ஜூன் 7) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.
மேலும், சூர்யா ரசிகர்களோ ‘சூர்யா 40’ குறித்த அப்டேட் கொடுக்குமாறு தொடர்ச்சியாக இயக்குநர் பாண்டிராஜிடம் வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “அன்பான ரசிகர்களே! 35% படம் முடிந்துள்ளது. எடுத்தவரை நன்றாக வந்துள்ளது. ஊரடங்கு முடிந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிவிட வேண்டியதுதான். படக்குழுவினர் தயாராகவுள்ளோம்.
படத்தின் தலைப்பு மாஸாக, முன் அறிவிப்புடன் வரும். ஜூலை வரை நேரம் கொடுங்கள் ப்ளீஸ்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாண்டிராஜ்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘சூர்யா 40’ படத்தில் சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Related posts